வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓடிய நிலையில் இனி அவர் அரசியலுக்கு திரும்ப மாட்டார் என்று அவரது மகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறிய நிலையில் நேற்று பிரதமர் ஷேக் ஹசீனா இல்லத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கு உள்ள பொருட்களை சூறையாடிய வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அதன் பின்னர் இந்தியாவுக்கு தப்பிச்சென்ற நிலையில் அங்கிருந்து லண்டன் செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஷேக் ஹசீனா மகன் தனியார் ஊடகத்தில் அளித்த பேட்டியில் ஷேக் ஹசீனா மிகவும் அதிருப்தி அடைந்து உள்ளார் என்றும் சிறுபான்மையினர் தனக்கு எதிராக திரும்பியதால் கவலையில் இருக்கிறார் என்றும் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகுவது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலை ஆலோசித்து வந்தார் என்றும் இனிமேல் அவர் அரசியலுக்கு திரும்ப மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
வங்கதேச நாட்டையே அவர் தலைகீழாக மாற்றினார் என்றும் அவர் ஆட்சிக்கு வரும்போது வீழ்ச்சி அடைந்த நாடாக இருந்த நிலையில், ஏழை நாடாக இருந்த நிலையில், தற்போது ஆசியாவில் அதிகம் வளரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அவரது இந்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.