ஜப்பான் பாராளுமன்ற தேர்தல்: பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி!

Siva
திங்கள், 28 அக்டோபர் 2024 (13:22 IST)
ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் ஷிகெரு இஷிபாவின் தலைமையிலான ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி (LDP) பெரும்பான்மையை இழந்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஜப்பானில் முன்னாள் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ பதவி விலகியதை தொடர்ந்து, கட்சித் தலைவராக ஷிகெரு இஷிபா தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் அவரே பிரதமராக பொறுப்பேற்றார்.

இது தவிர, லிபரல் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டி பதவி விலகியதால், அந்தக் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது.
 
தனிப்பெரும்பான்மையை மீண்டும் பெற முதன்முறையாக தேர்தல் நடத்தத் தீர்மானித்தார் இஷிபா, அதன்படி நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை இழந்தது, இது பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. தற்போதைய சூழலில் ஆட்சியமைக்க, மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற அவர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

2012 ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சியில் வந்த லிபரல் ஜனநாயக கட்சிக்கு, இந்தத் தோல்வி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 465 இடங்களில், லிபரல் ஜனநாயக கூட்டணி 215 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது, 233 இடங்கள் பெரும்பான்மை பெற தேவையாகும்.

இந்தத் தேர்தலில், ஜப்பானின் பிரதான எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி 148 இடங்களை வெற்றி கொண்டது. கடந்த தேர்தலில் பெற்ற 98 இடங்களை விட கூடுதலாக 50 இடங்களில் வெற்றி பெற்றது. ஊழல் மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சனைகளால் ஆளும் கட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையின்மை இந்தத் தேர்தல் முடிவில் வெளிப்படையாகக் காணப்பட்டது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்