ஈரானின் ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் குண்டுமழை! - நாளுக்கு நாள் உச்சமடையும் போர்!

Prasanth Karthick

சனி, 26 அக்டோபர் 2024 (08:34 IST)

லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா அமைப்புக்கு ஆயுத உதவி செய்து வரும் ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இஸ்ரேல் - பாலஸ்தீன் ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த ஓராண்டு காலமாக போர் நடந்து வருகிறது. இதில் இஸ்ரேல் ராணுவம் காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் 41 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். இந்த போரில் ஹமாஸ்க்கு ஆதரவாக ஹவுதி, ஹெஸ்புல்லா அமைப்புகளும் இஸ்ரேலை தாக்கி வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

 

ஹெஸ்புல்லா அமைப்பிற்கு ஈரான் ஆயுத உதவிகளை செய்து வருகிறது. வடக்கு இஸ்ரேல் மீது ஹெஸ்புல்லா தாக்குதல் நடத்திய நிலையில், சில நாட்கள் முன்னதாக ஈரானும் நேரடி ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இதற்கு ஈரானுக்கு பதிலடி தரப்படும் என இஸ்ரேல் கூறியிருந்தது.

 

இந்நிலையில் நேற்று ஈரானின் ராணுவ இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில் “ஈரானும் அதன் ஆதரவாளர்களும் ஈரானிய மண்ணில் இருந்து நேரடி தாக்குதல்கள் உள்பட ஏழு முனைகளில் இருந்து இஸ்ரேலை தாக்கி வருகின்றனர். அவர்களுக்கு பதிலளிக்கும் உரிமையும் கடமையும் இஸ்ரேலுக்கு உள்ளது. இஸ்ரேல் நாட்டையும், மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்” என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

 

அதேசமயம் போரை எதிர்கொள்ள முழு நிலையில் தயாராக இருக்கும்படி ஈரான் ராணுவத்திற்கு அந்நாட்டின் தலைவர் அலி காமெனி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதில் தாக்குதலை தொடங்கினால் பெரும் போர் நிகழ வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்