பலரின் உயிர்களை பலிவாங்கிய புளூவேள் விளையாட்டிற்கு அட்மினாக செயல்பட்ட ரஷ்யாவை சேர்ந்த 17 வயது சிறுமி கைது செய்யப்பட்டார்.
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் புளூவேல் விளையாட்டால் இளைஞர்கள் தற்கொலை செய்து வரும் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக இந்திய சிறுவர், சிறுமிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இதற்கு அடிமையாகி வருகின்றனர்.
இதுவரை உலகமெங்கும் 130 பேரை இந்த விளையாட்டு பலி வாங்கியுள்ளது. சமீபத்தில் கூட மதுரையை சேர்ந்த மாணவர் ஒருவர் இந்த விளையாட்டை ஆடி முடிவில் தற்கொலை செய்து கொண்டார். அதன் பரபரப்பு அடங்குவதற்குள், பாண்டிச்சேரியை சேர்ந்த மற்றொரு மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், இந்த விபரீத விளையாட்டை விளையாடும் நபர்களுக்கு, சாவு கட்டளைகளை பிறப்பிக்கும் அட்மினாக செயல்பட்டு வந்த 17 வயது சிறுமியை போலீசார் நேற்று ரஷ்யாவில் கைது செய்துள்ளனர். தொடக்கத்தில் இவரும் இந்த விளையாட்டை விளையாடி வந்துள்ளார். ஆனால், கடைசியில் தற்கொலை செய்து கொள்ளாமல் தப்பியுள்ளார். அதன் பின் இவர் புளுவேல் கேமின் அட்மினாக செயல்பட்டுவந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவரைப் போல் இன்னும் பலர் இருக்கலாம் என்பதால், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.