வயிறு கோளாறு, வாய்வு தொல்லையால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை பிரண்டையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இந்த ஆரோக்கியம் தரும் பிரண்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
பிரண்டையை நாரை நீக்கிவிட்டு அலசி பொடியாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளை சிறிது நேரம் வெயிலில் வைக்கலாம். தக்காளி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.
கடாயில் பொடி செய்யவேண்டிய பொருள்களை, ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்துப் பொடித்து கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் பிரண்டையை சேர்த்து வதக்கவும். இதில் புளிக்கரைசலில் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள், வறுத்து அரைத்த பொடி சேர்த்து கொதிக்கவிடவும். பிரண்டை வெந்த பின் வெல்லத்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். சுவையான ஆரோக்கியம் நிறைந்த பிரண்டை குழம்பு தயார்.