அதிமுக அமைச்சர்களை பாராட்டித்தள்ளும் கமல் - காரணம் என்ன?

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (15:55 IST)
அதிமுகவை அவ்வப்போது விமர்சித்து வரும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், தற்பொழுது அமைச்சர்களை பாராட்டியுள்ளார்.
 
திமுக தலைவர் கருணாநிதி கடந்த நான்கு நாட்களாக உடல் நலமின்றி சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கையசைவை காண பல தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு காத்துக்கிடக்கின்றனர். மேலும், பல அரசியல் தலைவர்களும் அவரை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.  
 
பல கருத்து வேறுபாடுகளும், கொள்கை வேறுபாடுகளும் இருந்தாலும்கூட திமுகவை பரம எதிரியாக கருதும் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் கோபாலபுரம் வீட்டில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் போதே நேரில் சென்று நலம் விசாரித்த கமல்ஹாசன், காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
 
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், அரசியல் வேறுபாடு பார்க்காமல் அதிமுக அமைச்சர்களும், முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது மிகவும் பாராட்டத்தக்க விஷயம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்