மீன் விற்கும் கல்லூரி மாணவிக்கு கேரள முதல்வர் ஆதரவு

சனி, 28 ஜூலை 2018 (11:43 IST)
மீன் விற்ற கல்லூரி மாணவியை பலர் விமர்சித்து வந்த நிலையில் கேரள முதல்வர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹனான். இவரது குடும்பம் வறுமையில் வாடிய போதிலும் தனது தீராத முயற்சியால் சுயமாக வேலை செய்து தனது குடும்பத்தை கவனித்து வருகிறார். மேலும் தனது சம்பாதியத்தில் அவர் கல்லூரியில்  பி.எஸ்சி 3-ம் ஆண்டு வேதியியல் படித்து வருகிறார்.
 
இவர் கல்லூரி முடிந்ததுடன், கல்லூரி சீருடையுடன் தெருக்களில் மீன் விற்பார். இவரிடம் ஏராளமானோர் மீன் வாங்கி செல்வர். இவர் சீருடையுடன் மீன் விற்கும் புகைப்படத்தை நாளிதழ் ஒன்று வெளியிட்டது. இதனைப்பார்த்த பலர் மாணவியை பாராட்டினர்.
 
ஆனால் பலர் மாணவி பணத்திற்காகவும், விளம்பரத்திற்காக மட்டுமே இப்படி செய்கிறார் என்றனர். இதுகுறித்து பேசிய மாணவி குடும்ப சூழ்நிலை காரணமாகவே சிறு வேலைகள் செய்து பணம் ஈட்டி வருவதாக கூறினார். மேலும் தனக்கு விளம்பரம் தேட அவசியமில்லை என பேசினார்.
இதுகுறித்து அறிந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ஹனான் குடும்பத்தை பற்றி எர்ணாகுளம் மாவட்ட கலெக்டரிடம் விசாரித்தார். பின்னர் மாணவி ஹனானின் தன்னம்பிக்கையை பாராட்டுவதாகவும், ஹனானை தேவையின்றி விமர்சித்து அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கருத்து தெரிவித்தார்.
 
மேலும் குடும்ப கஷ்டத்திற்காக பாடுபடும் மாணவி ஹனானுக்கு கேரளாவும், கேரள மக்களும் துணை நிற்க வேண்டும் என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்