டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதிஷி தற்போது முதல்வராக உள்ளார்.
இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதத்துடன் ஆம் ஆத்மி ஆட்சிக் காலம் முடிவடைய இருக்கிறது. அதற்கு முன்பே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், தேர்தல் தேதியை இன்னும் ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதால், இப்போதே அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டதோடு, 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, கவர்ச்சிகரமான திட்டங்களையும் வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள நிலையில், பாஜக விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.