வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை! தடை செய்யப்படுமா?

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2018 (21:17 IST)
வாட்ஸ் அப் மூலம் குழந்தைகள் கடத்தப்படுவதாக பரவும் வதந்தியால் அப்பாவிகள் பலர் கொல்லப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில் இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.
 
கடந்த சில மாதங்களாக ஒருசில குறிப்பிட்ட ஜாதி பெண்கள் கற்பழிப்பு, இறைச்சிக்காக பசு மாடுகள் கடத்தல், பிள்ளைகளை கடத்தும் கும்பல் போன்ற விவகாரங்கள் குறித்து வாட்ஸ் அப்பில் அதிக அளவில் வதந்திகள் பரவி வருகின்றன. இந்த வதந்தி எந்த அளவுக்கு உண்மை என்பதை அறியாமல் அப்பாவிகள் பலர் பொதுமக்களால் கொல்லப்படுகின்றனர். 
 
இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் சமூக பிரச்சனைகள் காரணமாக வதந்திகளை பரவிவதை அந்நிறுவனம் தடுக்க வேண்டும் என்று வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
 
வாட்ஸ் அப் செயலியில் பரப்பப்படும் பொறுப்பற்ற, உணர்வுகளை தூண்டிவிடக் கூடிய, ஆத்திரமூட்டும், வதந்தியான தகவல்களால் சமீபகாலமாக அசாம், மகாராஷ்டிரா, கர்நாடகா, திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற படுகொலை சம்பவங்கள் வேதனைக்கும் வருத்தத்துக்கும் உரியதாக உள்ளது.
 
நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட செயலிகளை சில சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்தி வன்முறைக்கு வித்திட்டு வருகின்றனர். இதில் தங்களுக்கான பொறுப்பை இந்த செயலி நிறுவனம் தட்டிக் கழித்துவிட முடியாது. இதைப்போன்ற தகவல்கள் பரவுவதை உரிய சாதனங்களின் மூலம் உடனடியாக தடுத்தாக வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வாட்ஸ் அப் இந்தியாவில் தடை செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்