முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் தயாராகி வரும் 'சூர்யா 44' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44' எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
படத்தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகியிருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் ,ஊட்டி, கேரளா, சென்னை ஆகிய இடங்களில் நான்கு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது. விரைவில் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக், டைட்டிலுக்கான மோசன் போஸ்டர்... என படத்தைப் பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் தொடர்ந்து வெளியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே படத்தின் நாயகனான நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்திற்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டது என்பதும், அதில் நடிகர் சூர்யாவின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால்.. அந்த காணொளி நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.