எத்தனை தடவைதான் ஒரே படத்தை காப்பி அடிப்பீங்க? லார்கோ சாஹோ ஆன கதை!

Webdunia
திங்கள், 2 செப்டம்பர் 2019 (12:34 IST)
சாஹோ திரைப்படம் பிரெஞ்சில் வெளியான திரைப்படத்தின் காப்பி என அந்த பிரெஞ்சு இயக்குனரே காட்டமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபாஸ், ஷ்ரதா கபூர் நடித்து சமீபத்தில் வெளியான படம் “சாஹோ”. 350 கோடி செலவில் 4 மொழிகளில் இந்த படம் வெளியாகியுள்ளது. இந்த படம் பிரெஞ்சில் வெளிவந்த லார்கோ வின்ச் என்ற திரைப்படத்தின் காப்பி என்று பிரெஞ்சு இயக்குனர் ஜெரோம் சல்லி தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு நாவலாசிரியர் ஷான் வான் ஹாமே எழுதிய காமிக்ஸ் தொடர்தான் “லார்கோ வின்ச்”. கார்ப்பரேட் மோசடிகளை தோலுரித்து காட்டும் இந்த தொடர் 1994 முதல் பிரெஞ்சில் வெளியாகி வருகிறது. இதன் அதிகாரப்பூர்வ தமிழ் மொழிபெயர்ப்பு காமிக்சை லயன் முத்து காமிக்ஸ் நிறுவனம் சமீப காலமாக வெளியிட்டு வருகிறது.

இந்த காமிக்ஸ் தொடரை மையமாக கொண்டு பிரெஞ்சில் இரண்டு திரைப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. சில வருடங்கள் முன்பு கௌதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்த ”யோகன் அத்தியாயம் ஒன்று” என்ற திரைப்படத்தின் போஸ்டர் வெளியானபோது, அது லார்கோ வின்ச்சின் காப்பி என்ற புகார்கள் எழுந்தது. அதற்குள் அந்த பட பணியும் நின்று போனது. இந்நிலையில் சில வருடங்கள் முன்பு தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடித்து வெளியான “அஞ்ஞானவாசி” என்ற படம் லார்கோ வின்ச்சின் காப்பி என்று அதன் இயக்குனர் ஜெரோம் சல்லி திட்டி பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் சாஹோ படமும் இந்த கதையின் காப்பிதான் என அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில் “லார்கோ வின்ச்சை தெலுங்கு சினிமா திருடுவது இது இரண்டாவது முறை! தெலுங்கு இயக்குனர்களே படத்தை திருடினாலும் அதை ஒழுங்காக செய்யுங்கள்” என்று திட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்