கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்கள் ஓடிடி பிளாட்பார்மகளில் தங்கள் படங்களை ரிலீஸ் செய்வதால் ஐநாக்ஸ் நிறுவனம் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களை ஓடிடி பிளாட்பார்ம்களில் ரிலிஸ் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே பொன்மகள் வந்தாள், பெண்குயின் மற்றும் டக்கர் ஆகிய தமிழ்ப் படங்கள் ரிலீஸாக் உள்ள நிலையில் இப்போது அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் குர்ரானா நடித்துள்ள குலாபோ சிதாபோ’ இந்தித் திரைப்படமும் அது போல ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில் நாடெங்கும் திரையரங்கங்களை நடத்திவரும் ஐநாக்ஸ் நிறுவனம் இது குறித்த தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அது சம்மந்தமான கடிதத்தில் ‘நல்ல படங்கள் அதிகமாக வரவேண்டும் என்பதற்காக நாடு முழுக்க உலகத் தரம் வாய்ந்த திரைகளை ஐநாக்ஸ் நிறுவியுள்ளது. தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கங்களுக்கும் எப்போதும் ஒரு புரிதல் இருந்தே வந்துள்ளது. தயாரிப்பாளர்களின் இந்த முடிவால் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்க வேண்டிய தயாரிப்பாளர்கள், ஆபத்தில் உதவாத நண்பர்களாக மாறுகிறார்கள்.’ எனத் தெரிவித்துள்ளது.