சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த கங்குவா திரைப்படம் கடந்தவாரம் உலகம் முழுவதும் அதிகளவிலான திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் இயக்கியுள்ளார். படத்தில் பாபி தியோல், திஷா பதானி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான கங்குவா முதல் காட்சிக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. விமர்சனங்களாக மட்டுமில்லாமல் படம் பற்றி கேலிகளும், சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பற்றிய கேலிகளும் வைரலாக சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்தன. படம் படுமோசம் என்றாலும் சூர்யா மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பப்படுகிறதோ என்ற சந்தேகமும் வைரல் பதிவுகளைப் பார்க்கும்போது எழாமலில்லை. இதை நேற்று தன்னுடைய பதிவில் ஜோதிகா வெளிப்படுத்தியிருந்தார்.
இதையடுத்து இப்போது இயக்குனர் சீனு ராமசாமியும் இதுபற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “"திரைப்பட விமர்சனம் செய்வது என்பது அவரவர் சுதந்திரம். கல்வி பணிக்கு வெகு காலம் நன்மை செய்துவரும் சூர்யா, சிவக்குமார் போன்றவர்களை தனிப்பட்ட அவதூறு செய்வது என்பது மிகவும் வருத்தத்தை தருகிறது. திரைத்துறைக்கும் அதனை சார்ந்த ஏனைய தொழில் முனைவோர்களுக்கும் பாதுகாப்பற்ற தன்மையை இது உணர்த்துகிறது" என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.