இயக்குநர் ராம்கோபால் வர்மா தயாரிப்பில் உருவாகியுள்ள 'சாரி' திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

J.Durai
திங்கள், 28 அக்டோபர் 2024 (10:50 IST)
இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மா தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். பயமுறுத்தும் திகில் கதைகள், யதார்த்தமான கதைகள் மற்றும் பல உண்மை மாஃபியா கதைகளை திரையில் கொண்டு வந்து பலரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார் ராம்கோபால் வர்மா. அவரது பெருமையை எடுத்துக்காட்டும் விதமாக அவர் இயக்கிய 'பூத்' திரைப்படம் பல நகரங்களில் ஹாலோவீன் விழாவிற்காக மீண்டும் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பல இளம் திறமையாளர்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் ராம்கோபால் வர்மாவின் தயாரிப்பில் வெளியாகும் 'சாரி' திரைப்படத்தை கிரி கிருஷ்ணா இயக்கியுள்ளார். 
 
இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகும் என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. 
 
படத்தின் அடிப்படை கரு அதிகப்படியான காதல் பயமுறுத்தும் என்பதுதான். சமூக ஊடகங்களில் ஏற்படும் சில எதிர்பாராத விஷயங்கள் சமூகத்திலும் தனிப்பட்ட ஒருவர் வாழ்விலும் ஏற்படுத்தும் மாற்றங்களை இந்தப் படம் பேசுகிறது.  இதில் ஆராத்யா கதாநாயகியாகவும், சத்யா யாது பயமுறுத்தும் பயங்கரமான காதலனாகவும் நடித்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் உள்ள பிரபலமான பெண்களின் சூழ்நிலை மற்றும் அவர்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளையும் பேசும் படமாக பல த்ரில்லர் தருணங்களுடன் 'சாரி'  இருக்கும். 
 
ஆர்வி புரொடக்ஷன் சார்பில் ராம் கோபால் வர்மா மற்றும் ரவி வர்மா தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்