‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

vinoth

திங்கள், 7 ஏப்ரல் 2025 (07:04 IST)
உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் அறிமுகம் தேவையில்லாத நபர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

கடந்த ஆண்டு இறுதியில் தான் சிம்பொனி ஒன்றை உருவாக்கி உள்ளதாக இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ’Valiant’ எனப் பெயரிடப்பட்டுள்ள அவரின் முதல் சிம்பொனி குறித்து தகவல் வெளியானதும், உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களிடம் இருந்து ஆரவாரமாக வாழ்த்துகள் குவிந்தன. பல அரசியல் தலைவர்கள் நேரை சந்தித்து வாழ்த்தினர். மார்ச் 8 ஆம் தேதி தன்னுடைய முதல் சிம்ஃபொனியை அரங்கேற்றினார். இதையடுத்து அவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய இசையில் தானே பாடிய பாடல்கள் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் ரொம்பவும் அரிதாகதான் பாடுவேன். அதுவும் பாடகர்கள் இல்லாத போதுதான் நாமே பாடுவேன் என்று முடிவெடுப்பேன். அப்படிதான் தாய் மூகாம்பிகை படத்தில் ‘ஜனனி ஜனனி’ பாடலை ரெக்கார்ட் செய்யும் நாளன்று ஜேசுதாஸ் இல்லாததால் நான் முதலில் ட்ராக் பாடிவிட்டு பின்னர் அவரை வைத்து எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னேன்.

ஆனால் தயாரிப்பாளர் ‘என்ன இருந்தாலும் ஜேசுதாஸ் பாடுவது போல வருமா?” என்று கேட்டார். ஆனால் நான் பாட ஆரம்பித்ததும் அங்கிருந்தவர்கள் எல்லாம் அழ ஆரம்பித்து விட்டார்களாம். வழக்கமாக உணர்ச்சிகளைக் காட்டாத எஞ்சினியர் கூட அழ ஆரம்பித்துவிட்டார். அன்று நான் பாடவில்லை. தாய் மூகாம்பிகைதான் எனக்குள் வந்து பாடிச் சென்றாள்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்