‘பிளாக் திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

J.Durai
செவ்வாய், 8 அக்டோபர் 2024 (09:15 IST)
ஒவ்வொரு படத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி எடுத்துக் கொண்டாலும் நல்ல தரமான, கருத்தாழம் மிக்க அதேசமயம் ரசிகர்களுக்கு பிடித்தவகையில்  பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்ட படங்களை மட்டுமே தர வேண்டும் என்கிற நோக்கில் படங்களை தயாரித்து வரும் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‘பிளாக்’.
 
அறிமுக இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணி இயக்கியுள்ள இந்த படத்தில்  ஜீவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, கோகுல் பதிவை மேற்கொள்ள, பிலோமின் ராஜ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். 
 
வரும் அக்டோபர் 11ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து ‘பிளாக்’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தகவல்களையும் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
 
இந்த நிகழ்வில் இயக்குநர் பாலசுப்பிரமணி பேசும்போது.......
 
இந்த கதையை ஒளிப்பதிவாளர் பி.வி சங்கர் மூலமாக முதலில் தயாரிப்பாளர் SR.பிரகாஷிடம் சொன்னபோது அவருக்கு அதில் பெரிய ஈடுபாடு இல்லாதது போல தான் தெரிந்தது. மேலும் இன்னும் கதையில் சில அம்சங்கள் தேவைப்படுகிறது என்று கூறினார். ஒருவேளை நம்மை தவிர்ப்பதற்காக தான் அப்படி சொல்கிறாரோ என நினைத்து வந்து விட்டேன். ஆனால் பத்து நாட்கள் கழித்து என்னை அழைத்து நான் கேட்ட விஷயத்தை பற்றி யோசித்தீர்களா அதை சரி செய்யுங்கள் என்று மீண்டும் கூறியபோது தான் அவர் இந்த கதையில் உண்மையிலேயே ஆர்வமாக இருக்கிறார் என்பது அப்போதுதான் எனக்கு புரிந்தது. அவர் கூறிய விஷயங்களை எல்லாம் திருத்தம் செய்து அவரிடம் இந்த முறை ஸ்கிரிப்ட் ஆகவே கொடுத்துவிட்டேன்.
மீண்டும் அவர் என்னை அழைத்தபோது இன்னும் ஏதாவது சில திருத்தங்கள் சொல்லப் போகிறார் என நினைத்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள் என்று சொன்னபோது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இந்த உதவியை செய்த பி.வி.சங்கருக்கு நன்றி.
 
ஒளிப்பதிவாளர் கோகுல் இந்த படத்திற்கு அழகாக கணக்கீடுகள் செய்து படப்பிடிப்பை நடத்தினார். நான் ஆரம்பத்தில் இருந்து வேண்டாம் என்று சொன்ன ஒரு நபர் இந்த படத்தின் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். எனக்கு நாளைய இயக்குனர் காலத்திலிருந்து ஒரு படத்தொகுப்பாளர் நண்பராக இருக்கிறார். இருவரும் ஒன்றாக தான் பயணித்து வந்தோம். அவர்தான் வேண்டுமென கேட்டேன். ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கும் சொந்த பிரச்சனை காரணமாக இந்த படத்திற்குள் வர முடியவில்லை. அதன் பிறகுதான் பிலோமிம் ராஜ் இதற்குள் வந்தார். அவருக்கும் எனக்கும் முதல் நாளில் இருந்தே சண்டைதான். ஆனால் அது ஆரோக்கியமாக இருக்கும். போக போக எங்களுக்குள் படம் தொடர்பான விவாதங்கள், சண்டைகள். 
படம் முடியும்போது எங்களுக்குள் ஒரு நட்பு உருவாகிவிட்டது.
 
விவேக் பிரசன்னா நான் நாளைய இயக்குநர் சமயத்தில் குறும்படம் இயக்கிய போதிருந்தே என்னுடன் பணியாற்றியவர். சொல்லப்போனால் அப்போது இதே போன்ற ஒரு கதையை வேறு வெர்சனில் நான் படமாக்கிய போது என்ன கதாபாத்திரத்தில் நடித்தாரோ அதேபோன்ற இன்னொரு கதாபாத்திரத்தில் தான் இந்த வெர்ஷனில் நடித்திருக்கிறார். பிலோமின் ராஜூக்கு நேர் எதிராக இசையமைப்பாளர் சாம் சி.எஸ் உடன் எனக்கு எந்த ஒரு விவாதமும் ஏற்பட்டது இல்லை. அவரிடம் சென்றாலே இன்னும் சிறிது நேரம் உட்கார்ந்து பேசலாம் என்பது போல நாம் என்ன சொன்னாலும் அவர் கேட்பார். என்னை ஒரு முதல் பட இயக்குனர் என்பது போலவே அவர் உணர வைக்கவில்லை.
 
இந்த கதையை கேட்கும் ஹீரோக்கள் அனைவருக்குமே ஆரம்பத்தில் இது பிடித்து விடும். ஆனால் சில நாட்கள் கழித்து அதில் சில சந்தேகங்களை, லாஜிக்குகளை கேட்க ஆரம்பிப்பார்கள். மற்ற மாநில வெளியீடுகள் வரை கணக்கு போட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் ஜீவா சாரை பொருத்தவரை ஒன்றை முடிவு செய்து விட்டால் அதில் உறுதியாக இருக்கிறார். அவரும் ஆரம்பத்தில் மற்றவர்களைப் போல் தான் பிடித்திருக்கிறது என்று சொல்கிறாரோ என நினைத்தேன். அதன்பிறகு இந்த படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகிறார் என்று தெரிய வந்தபோது தான் நிச்சயமாகவே இந்த கதையின் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதை உணர முடிந்தது.  எப்படி படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜூக்கு சயின்ஸ் பிக்சன் கதைகள் பெரிய விருப்பமில்லையோ அதேபோல் தான் பிரியா பவானி சங்கருக்கும். முதலில் கதையைக் கேட்டார். பின் ஸ்கிரிப்ட்டையும் வாங்கி படித்தார். அப்படியும் அவருக்கு புரியவில்லை என்றார். ஆனாலும் அவருக்கு தயாரிப்பாளர் பிரபு சார் இருக்கிறார் என்கிற நம்பிக்கை இருந்ததால் இந்த படத்தில் ஒப்புக்கொண்டார்” என்று கூறினார்.
 
நாயகன் ஜீவா பேசும்போது, 
 
இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது உடனே பிடித்து விட்டது. காரணம் பல ஹீரோக்களிடம் சொல்லி அதில் சின்ன சின்ன மாறுதல்களை அழகாக செய்து என்னிடம் வரும்போது ஒரு முழுமையான கதையாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் இதில் எந்த திருத்தமோ மாறுதலோ சொல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை. இது ஒரு மைண்ட் ட்விஸ்ட்டிங் ஆன கதை. வலது மூளை இடது மூளை என இந்த படத்தில் சொல்வதைப் பார்க்கும்போது மக்களுக்கு அவர்களது மூன்றாவது கண்ணே திறந்து விடும் என நினைக்கிறேன். குறிப்பாக இளைஞர்களை இந்த படம் ரொம்பவே கவர்வதுடன் அவர்களது மூளைக்கும் வேலை வைக்கும். இதை சைக்காலஜிக்கல் திரில்லர் என சொல்லலாம். ஒரு கட்டத்தில் இது ஹாரர் படமோ என்கிற சந்தேகம் கூட படம் பார்ப்பவர்களுக்கு தோணும்.
 
விவேக் பிரசன்னாவின் காட்சிகள் தான் இந்த படத்தில் ரொம்பவே முக்கியமானவை. படம் பற்றி ரசிகர்களுக்கு எழும் கேள்விகளுக்கான விடைகள் அவரது கதாபாத்திரத்தில் தான் இருக்கின்றன. இது ஒரு ஆங்கில படத்தின் ரீமேக் என்றார்கள். ஆனால் அந்த படத்தை நான் இதுவரை பார்க்கவில்லை. காரணம் அதை பார்த்துவிட்டு இன்னும் ஏதாவது இம்ப்ரூவ் பண்ணுவோம் என நினைத்து தேவையில்லாமல் எதுவும் பண்ணி விடக்கூடாது என்பதால் தான். இந்த படம் பெரும்பாலும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிலும் இரவு நேர படப்பிடிப்பாகத்தான் நடத்தினோம்.
 
நான் சினிமாவிற்கு வந்து 21 வருடம் ஆனது பற்றி பேசி என்னை வயதான ஆள் போல காட்டி விட வேண்டாம். என்னுடைய முதல் பத்து வருடங்களில் நான் கொஞ்சம் பரிசோதனை முயற்சிகளான படங்களை நிறைய பண்ணினேன். அந்த வகையில் அடுத்து வர இருக்கும் எனது படங்களில் இது ஒரு புதுமையான படமாக இருக்கும். பொதுவாகவே நான் திரில்லர் படங்களின் ரசிகன். பாலா இந்த கதையை அற்புதமாக கையாண்டு உள்ளார். படத்தில் மிக சில கதாபாத்திரங்கள் தான். ஆனாலும் ரசிகர்களை நன்றாக பொழுது போக்க செய்வார்கள். பல படங்களை தியேட்டர்களில் பார்க்கும்போது படம் ஒரு பக்கம் திரையில் ஓடிக்கொண்டிருக்கும்.. ரசிகர்களின் செல்போன்கள் வெளிச்சமாக இருக்கும். அப்படி அவர்கள் கவனத்தை சிதற விடாமல், ஒரு காட்சியை தவறவிட்டாலும் அடுத்து இது ஏன் நடந்தது என தெரியாமல் போய்விடுமோ என்பதற்காக தொடர்ந்து பார்க்கும் விதமாக இந்த படம் இருக்கும்.
 
எடிட்டர் பிலோமின் ராஜூக்கு ஒரே நேரத்தில் இந்த படத்துடன் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அவர் இந்த ‘பிளாக்’ படத்தை எப்படி சொல்லி இருப்பார் என பார்ப்பதற்கு நானே ஆர்வமாக இருக்கிறேன். பிரியா பவானி சங்கரை அவர் என்னை பேட்டி எடுத்த காலத்திலிருந்து தெரியும். படப்பிடிப்பு தளத்தில் கூட இந்த வசனத்தை எப்படி பேசுவது என இயக்குநருடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பார். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. தயாரிப்பாளர் பிரபு சார் தரப்பிலேயே சூர்யா, கார்த்தி என ஹீரோக்கள் இருக்கும்போது என்னை நம்பி இப்படி ஒரு வலுவான கதையை கொடுத்ததற்கு அவருக்கு நன்றி. அவருடன் இணைந்து இதுபோன்று இன்னும் பல படங்கள் பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்