புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆன தினத்தில் தியேட்டர் வாசலில் நிகழ்ந்த நெரிசல் நிகழ்ச்சியில், ஒரு பெண் உயிரிழந்த வழக்கில் இன்று நடிகர் அல்லு அர்ஜுன் காவல் நிலையத்தில் ஆஜராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியானது. ரிலீஸ் நாளில் முதல் காட்சியை காண வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, இடைக்கால ஜாமீன் பெற்றிருந்தார்.
அவர் விடுதலை பெற்ற பின்னரும், இறந்த பெண்ணுக்கு நீதி கேட்டு சிலர் போராட்டம் நடத்தினர். அப்போது, சிலர் அல்லு அர்ஜுன் வீட்டை தாக்கியதால், அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ரேவதி இறந்த வழக்கில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல்துறை சம்மன் அனுப்பியது. அந்த சம்மனை ஏற்று, இன்று அல்லு அர்ஜுன் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, அவர் கைது செய்யப்பட்ட போது விசாரணை நடைபெற்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் விசாரணை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.