சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்துகொண்டு பேசினார். அவரது பேச்சில் “போதை பொருள் பயன்பாட்டை நாம் அனைவரும் ஒன்றினைந்தால்தான் குறைக்க முடியும்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய கார்த்தி “இப்போது போதை பொருட்கள் புழக்கம் அதிகமாகி வருகிறது. போதை பொருட்களை பயன்படுத்தும் இளைஞர்களின் வயது குறைந்து கொண்டே செல்கிறது. முன்பெல்லாம் கல்லூரி மாணவர்கள் மது அருந்தினார்கள். இப்போதெல்லாம் பள்ளி மாணவர்களில் சிலரே போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.
பள்ளிகளுக்கு பக்கத்திலேயே போதைப் பொருள் விற்பனை அதிகமாகியுள்ளது. போதைப் பொருள் பயன்படுத்துபவர் மற்றும் விற்பவர் இருவரும் நம்மிடையே இருப்பவர்கள். இளைஞர்கள் போதை போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவதற்கு பதிலாக விளையாட்டுகளில் ஆர்வம் காட்டவேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளாக நண்பர்களாக வழிநடத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.