வீரேந்தர் ஷேவாக் - புழுதியில் இருந்து மேலெழுந்த புயல்

லெனின் அகத்தியநாடன்
செவ்வாய், 20 அக்டோபர் 2015 (18:12 IST)
எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பணமாக விளங்கிய, பந்துவீச்சாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய வீரர்கள் வரிசையில் இந்திய அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் ஷேவக்கிற்கு நிச்சயம் இடமுண்டு.
 

 
சாதாரண தானிய வியாபாரியின் மகனாகப் பிறந்தவர் ஷேவாக். இவரது தந்தையின் பெயர் கிருஷ்ணன், தாயின் பெயர் கிருஷ்ணா ஷேவாக். நான்கு பிள்ளைகளில், ஷேவாக் மூன்றாவது பிள்ளையாக பிறந்தவர். இரண்டு மூத்த சகோதரிகள் மற்றும் இளைய சகோதரர் ஒருவர்.
 
இவருடைய பள்ளிக் காலத்தில், எப்போதும், பள்ளியின் கிரிக்கெட் மைதானத்திலேயேதான் ஷேவாக் இருப்பார். இவரது ஆர்வத்தைக் கண்ட அந்த பள்ளியின் கிரிக்கெட் பயிற்சியாளர் ஏ.என்.சர்மா அவருக்கு தேவையான ஆட்ட நுணுக்கங்களையும், பயிற்சிகளையும் கற்றுத் தந்தார்.
 
அதன் விளைவாக, 1997-98 ஆம் ஆண்டில் தில்லி அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 19998-99 இல் துலீப் கோப்பைக்கான வடக்கு மண்டல அணியில் தேர்வு செய்யப்பட்டார். அப்போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிய ஷேவாக், அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்தார். அதில் ஒரு போட்டியில் 274 ரன்கள் குவித்ததும் அடங்கும்.
 
அதன் பிறகு நடைபெற்ற ரஞ்சி போட்டியில் 175 பந்துகளில் 187 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பிறகு தென் ஆப்பிரிக்காவிற்கு சென்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் ஷேவாக் இடம்பிடித்தார்.
 
சர்வதேச ஒருநாள் போட்டி துவக்கம்:
 
2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மொஹாலியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், வீரேந்தர் ஷேவாக் முதன் முதலாக களமிறங்கினார். ஆனால், அந்த போட்டியில் வெறும் ஒரு ரன்கள் மட்டும் எடுத்து சோயப் அக்தரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
 
அதுதான் அப்படியென்றால், தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு பந்து வீசிய சேவாக் மூன்று ஓவர்களை வீசி 35 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் ஷேவாக் சரியாக செயல்படாததால் அடுத்து இந்திய அணியில் இடம் பிடிக்க 20 மாதங்கள் ஆனது.
 
அதற்குப் பிறகு, 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஜிம்பாப்வேவிற்கு எதிரான தொடரில் ஷேவாக் களம் இறக்கப்பட்டார்.
 
பின்னர், ஆஸ்திரேலிய அணிக்காக எதிராக பெங்களூரில் நடைபெற்ற போட்டியில், ஷேவாக் 54 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். மேலும், அப்போட்டியில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இந்திய அணியை வெற்றி பெற வைத்து அப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
 
இவர் சச்சின் டெண்டுல்கரை தனது முன் மாதிரியாக கொண்டவர். இவர் விளையாடும் ஸ்டைல் கூட கிட்டத்தட்ட சச்சினின் ஆட்டத்தை ஒத்திருக்கும். துவக்க ஆட்டக்காரராக களமிறங்க ஆரம்பித்த பிறகு, இவர் முதல் பந்து முதலே அதிரடி தொடங்குவது வழக்கம்.
 
பந்துவீச்சாளர்களை மிரட்டிய ஷேவாக்:
 
இதனால், பந்துவீச்சாளர்கள் பலரும் பயந்து பயந்து பந்துவீசியதை பார்க்க முடிந்தது. எத்தகைய பந்துவீச்சாளர்களையும் அசாத்தியமாக எதிர்கொள்ளும் திறன் படைத்தவர் சேவாக். பந்துவீச்சில் சிறந்து விளங்கும், பவுன்ஸர்களை வீசி மண்டைகளை உடைக்கும் அணியான ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சாளர்களை மிரளச் செய்துள்ளார்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

2007ஆம் ஆண்டில் ஆஸ்‌திரேலியாவுக்கு சென்ற இந்திய அணியில், ஷேவாக்கிற்கு இடம் அளிக்காதது குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் இயான் சேப்பல் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
 
அப்போது கூறிய சேப்பல், ”ஷேவாக்கை பார்த்து இன்னமும் ஆஸ்‌திரேலிய அணியினர் அஞ்சுகின்றனர். பிரெட் லீ போன்ற பந்து வீச்சாளர்களை அவர் அடித்து நொறுக்கும் விதம் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும்” என்றார்.
 

 
இது தவிர பிரெட் லீ ஒருமுறை கூறும்போது, ”நீங்கள் எவ்வளவு சிறந்த, அனுபவமுள்ள பந்துவீச்சாளர்கள் என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. ஷேவாக் உங்கள் மணப்பான்மையை ஒன்றுமே இல்லாமல் செய்துவிடுவார்” என்றார்.
 
ஷோயப் அக்தரை பிச்சையெடுக்க வைத்த ஷேவாக்:
 
2003-04 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு சென்ற இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றது. அப்போட்டியின்போது ஷோயப் அக்தர் ஷேவாக்கை தொடர்ந்து சீண்டிக் கொண்டிருந்தார்.
 
ஆனால், ஷேவாக் தனது பேட்டிங் மூலம் பதிலடிக் கொடுத்துக்கொண்டு இருந்தார். அந்த போட்டியில் ஷேவாக் முச்சதத்தை கடந்தார். அதுவும் வெறும் 364 பந்துகளில். அதில் 38 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும்.
 
அந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போட்டிக்கு பிறகு கூறிய ஷேவாக், “ஷோயப் அக்தர் பந்துவீசினாரா இல்லை பிச்சை எடுத்தரா?” என்றார்.
 
ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே கூறுகையில், “ஷேவாக் எப்போதும் எனது அணியில் இருக்க விரும்பியிருக்கிறேன். நான் அவரின் பேட்டிங்கை பார்த்து ரசிக்க விரும்புவேன். ஆனால், பந்துவீச விரும்பமாட்டேன்” என்று வேடிக்கையாக கூறினார். இப்படி வெளிப்படையாக கூறும் அளவுக்கு எதிரணியை மிரட்டக்கூடியவர்.
 
”பந்துவீச்சாளர்கள் கூட்டம் ஒன்று நடத்தினோம். அந்த கூட்டம் முழுவதுமே ஷேவாக்கை எப்படி வீழ்த்துவது என்றுதான் அங்குலம், அங்குலமாக விவாதித்துக் கொண்டோம்” என்று கூறியவர் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் கிளார்க் கூறினார்.
 
சிக்ஸர் அடித்து முச்சதத்தை கடந்த ஷேவாக்:
 
பொதுவாக ஷேவாக் இந்திய அணிக்குள் நுழைவதற்கு முன்னர், இந்திய வீரர்கள் பெரும்பாலும் 90 ரன்களை கடந்துவிட்டால் அடுத்து தங்களது சதத்தை பதிவு செய்வதற்கு தேவைப்படும் 10 ரன்களை எடுக்க ஏறக்குறைய 20 பந்துகளையாவது வீணடித்து வெறுப்பேற்றுவார்கள்.
 

 
அது சச்சின், சவுரவ் கங்குலி, அஜய் ஜடேஜா, முஹமது அஷாருதின் என எல்லோருமே பொதுவான விஷயமாகவே இருந்தது. ஆனால், ஷேவாக் மட்டும்தான் பெரும்பாலும் பவுண்டரிகளையோ, சிக்ஸர்களையோ விளாசிதான் சதத்தை நிறைவு செய்வார். இது அனைவரும் புதுமாதிரியாக எல்லோருக்கும் தோன்றியது.
 
ஏன் அவர் ஒருமுறை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய பொழுது முச்சதத்தைக் கடந்தார். அந்த போட்டியில் 298 ரன்கள் எடுத்திருந்த ஷேவாக் சிக்ஸர் அடித்து தனது முச்சதத்தை நிறைவு செய்து அனைவரையும் மிரளச் செய்தார்.
 
இது குறித்து கூறிய பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ், “298 ரன்கள் குவித்த ஒருவர், சிக்ஸர் அடிப்பதை கொஞ்சம்கூட கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அப்படி செய்வதற்கு நீங்கள் ஒரு மேதாவியாகத்தான் இருக்க வேண்டும்” என்றார்.
 
சச்சின் டெண்டுல்கரே ஒருமுறை இது குறித்து வியந்து கூறியுள்ளார். அவர் கூறுகையில், ”90ஆவது ரன்களின்போது எவ்வாறு பதற்றமில்லாமல் விளையாட வேண்டும் என்பதை கற்றிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
 
அதே பாகிஸ்தான் வீரர் ரமிஷ் ராஜா வேறுமாதிரி கூறினார். அதாவது, “விவியன் ரிச்சர்ட்ஸ் ஒய்வு பெற்றபோது, இந்த கிரிக்கெட்டின் எதிர்காலம் நிறைவடைந்துவிட்டதாக நினைத்தேன். ஆனால், ஷேவாக் வந்தார். பிறகு அவர்தான் இந்த கிரிக்கெட்டின் அரசன்” என்று கூறினார்.
 
அவர் கிரிக்கெட் உலகிற்கு நிறைய பங்களிப்பு செய்திருக்கிறார். இளைஞர்கள் பலருக்கும், பிற தேசத்து கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் முன்னுதரணமாக திகழ்பவர் வீரேந்தர் ஷேவாக். அவரது ஓய்வு நிச்சயம் கிரிக்கெட்டிற்கு பேரிழப்பு என்பதை மறுக்க முடியாது. அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்....