ஜடேஜா இந்திய அணியின் சொத்தாக இருப்பார்… அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சொன்ன தோனி!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (09:27 IST)
இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ரவிந்தரா ஜடேஜா மொஹாலி போட்டியில் பேட்டிங் பவுலிங் இரண்டிலும் கலக்கி ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே மூன்றே நாளில் முடிவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.  பேட்டிங்கில்  7 ஆவது வீரராகக் களமிறங்கிய அதிரடியாக விளையாடி175 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். இதற்கு முன்னதாக இந்தியாவைச் சேர்ந்த கபில்தேவ் 7 ஆவது வீரராக களமிறங்கிய 169 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அந்த சாதனையை ஜடேஜா முறியடித்தார்.

பேட்டிங்கில் கலக்கியது போலவே பவுலிங்கிலும் 9 விக்கெட்கள் வீழ்த்தி கலக்கினார். முதல்  இன்னிங்சில் இலங்கை அணியின் 5 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா வீழ்த்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக மூன்று விதமான போட்டிகளிலும் பேட்டிங் , பவுலிங்  மற்றும் பீல்டிங் ஆகிய மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு ஆல்ரவுண்டராக பவனி வருகிறார் ஜட்டு. இந்நிலையில் ஜடேஜா 2012 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான போது அவரைப் பற்றி அப்போதைய கேப்டன் தோனி சொன்னது இப்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

நாக்பூர் டெஸ்ட் முடிந்தபோது ‘ஜடேஜாவுக்கு பேட்டிங் திறமையை வளர்த்துக் கொள்ள வாய்ப்பளித்தால் அவர் தலைசிறந்த ஆல்ரவுண்டராக வருவார். அவர் இந்திய அணியின் சொத்தாக இருப்பார்’ எனக் கூறியிருக்கிறார். இதை தோனியின் ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் இப்போது பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்