தமிழகத்தில் ஜனவரி 14 அன்று பொங்கல் பண்டிகை மற்றும் ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 உழவர் திருநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பொங்கல் அன்று நடைபெற இருந்த யுஜிசி - நெட் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் மற்றும் மதுரை எம்பி சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த நிலையில் இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தேர்வு தேதி மாற்றம் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
#UGCNET தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்றிட வேண்டும் என்று ஒன்றியக் கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தேன். தற்போது அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருப்பது சரியான முடிவு!
தமிழ்ப் பண்பாட்டுத் திரு நாட்களின்போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்கு பின்னர் அது ஒத்திவைக்கப் படுவதும் வாடிக்கையாகிவிட்டது.
இனியாவது நாட்டில் செயல்படும் எந்த ஒரு அமைப்பும், நமது நாட்டின் பன்முகத்தன்மையையும் - இங்கு வாழும் அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளையும் மதித்து முடிவுகளை எடுப்பார்கள் என நம்புவோம்!