15வது ஊதிய குழு உட்பட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர்கள் நலத்துறை இணை ஆணையர் தலைமையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15வது ஊதிய குழுவை அமைக்க வேண்டும், நிலுவையில் இருக்க கூடிய ஓய்வு பெற்றவர்களுக்கான 96 மாத ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும், அகவிலைப்படியை வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கடந்த ஜனவரி மாதம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்ந்து 4 கட்டங்களாக நடைபெற்றிருந்தது. 4 கட்டங்களாக நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது
இந்த நிலையில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மதியம் 3 மணி அளவில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் இருக்கக்கூடிய தொழிலாளர்கள் நல அலுவலகத்தில் தொழிலாளர்கள் நலத்துறை இணை ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.