''காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட அனுமதி தர மாட்டோம்''- முதல்வர் முக. ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (15:13 IST)
தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் இன்று தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

அதன்படி , தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில், இவ்வாண்டு காவிரி பாசனப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார்.

அதன்பின்னர், திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஆலங்குடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரிபவர்களிடம் முதல்வர் முக.ஸ்டாலின் கலந்துரையாடி அவர்களுடைய கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

இதையடுத்து, திருச்சிராப்பள்ளி மாவட்டம் வெள்ளனூரில் உள்ள நந்தியாறு வடிகாலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுபற்றி முதல்வர் முக.ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’உழவர் நெஞ்சங்களில் மகிழ்ச்சி மாரி பொழிய, உரிய காலத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணையின் நீர்வழிப் பாதைகளைத் தூர்வாரும் பணிகளை விரைந்து செய்து முடிக்கிறோம்.

கடந்த ஆண்டுகளில் நாம் படைத்த சாதனைகளை விடவும் வேளாண் விளைச்சல் அதிகமாக இருக்க வேண்டும் என்ற உயரிய இலக்குடன் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். கடைமடை வரை நீர் சென்று சேர்வதை உறுதிசெய்யும் விதமாக, மேட்டூர் அணைத் திறப்புக்கு முன்பாக இன்று திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் தூர்வாரும் பகுதிகளை ஆய்வு செய்தேன்.

காவிரித்தாய் ஈன்றெடுத்த புதல்வராம் கலைஞரின் நூற்றாண்டில் வேளாண் உற்பத்தியில் சாதனை படைப்போம்! ''என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ''காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட எந்தக் காரணத்தைக் கொண்டும் அனுமதி தர மாட்டோம்'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்