சமீபத்தில் பேனர் கலாச்சாரத்தால் தன்னுடைய விலைமதிப்பில்லா உயிரை சுபஸ்ரீ இழந்த நிலையில் அவரது பெற்றோர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த சில நாட்களாக ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இன்று சுபஸ்ரீ பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், சுபஸ்ரீ தந்தையிடம் தன்னை மகனாக நினைத்து, எந்த நேரத்தில் அழைத்தாலும் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் உள்ள சுபஸ்ரீயின் வீட்டிற்கு சென்ற விஜய பிரபாகரன், அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சுபஸ்ரீயின் இழப்பு தன்னை மிகவும் பாதித்ததாகவும், நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க முடிவு செய்து வந்ததாகவும், இதில் அரசியல் எதுவும் இல்லை, என்றும் விஜய பிரபாகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அவரது மரணத்திற்கு காரணமான அதிமுக பிரமுகரை உடனே கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் சுபஸ்ரீ மரணத்திற்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இனிவரும் தேமுதிக கூட்டங்களில் பேனர் வைப்பது தவிர்க்கப்படும் என்றும் அண்மையில் திருப்பூரில் நடைபெற்ற தேமுதிக விழாவில் பேனர் வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.