வர்தா புயலின் இயக்கத்தை கண்காணித்து தகவல் கொடுத்த இஸ்ரோ செயற்கைக்கோள்!!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2016 (10:50 IST)
வர்தா புயலால் கடலோர மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில்உயிரிழப்புகள் உள்பட பல்வேறு இழப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள், தமிழகத்தில் பல உயிர்களை காப்பாற்றியுள்ள நெகிழ்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

 
தமிழகத்தில் முக்கியமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் பெரும் சேதத்திற்கு உள்ளாகின. வர்தா புயல் கோர தாண்டவம் ஆடி ஆயிரக்கணக்கில் மரங்களை வேரோடு சாய்த்து விட்டது. வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின்கடத்தி கோபுரங்கள் சாய்ந்து விழுந்து மின்வெட்டு ஏற்பட்டது. கேபிள் டிவி வயர்களும், மின் வயர்களும், தொலைபேசி வயர்களும் அறுந்து விழுந்ததில் தொலைதொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 
 
கட்டங்கள் மற்றும் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மரங்கள் விழுந்ததால் பெரும் இழப்புகள் ஏற்பட்டன. அதேபோல், புயலில் சிக்கி சுமார் 20 மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
இந்நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) செயற்கைக்கோள்களான இன்சாட் 3DR மற்றும் ஸ்கேட்சாட்-1 ஆகியவை புயலின் இயக்கத்தை கண்காணித்து தகவல் கொடுத்ததையடுத்து 3 மாவட்டங்களில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாக்கப்பட்டனர். அதேபோல், ஆந்திர மாநில கடற்கரையோரப் பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு தகவல்கள் பெறப்பட்டன.
 
மேம்பட்ட வளிமண்டலவியல் செயற்கைக்கோளான இன்சாட் 3DR கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதியும், வானிலை முன்னறிவிப்பு மற்றும் சூறாவளி கண்காணிப்பு உள்ளிட்ட தரவுகளை தரவல்ல ஸ்கேட்சாட்-1 அதே செப்டம்பர் மாதம் 26-ம் தேதியும் விண்ணில் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரையில்