ஸ்டாலின், அழகிரி இணைவார்களா?: நைஸாக நழுவிய உதயநிதி ஸ்டாலின்!

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (17:35 IST)
திமுக தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக ஓய்வில் இருக்கிறார். அவர் முதுமையை நோக்கி செல்லும் போதே அவரது தலைமை பொறுப்புக்கு யார் வர வேண்டும் என்ற பிரச்சனை குடும்பத்துக்குள் வெடித்தது.
 
இதில் அழகிரியின் நடவடிக்கை கட்சிக்கு விரோதமாக அமைய அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கிய கருணாநிதி பின்னர் நிரந்தரமாக நீக்கினார். இதனையடுத்து அழகிரி தொடர்ந்து ஸ்டாலினுக்கு எதிராக பேசி வந்தார்.
 
குடும்பத்துக்குள் சமாதான பேச்சுக்கள் நடந்தாலும் இருவரும் இணைவது இன்னமும் சாத்தியமில்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக டெப்பாசிட் இழந்ததையடுத்து மீண்டும் ஸ்டாலினை சீண்டும் விதமாக பேசினார் மு.க.அழகிரி.
 
இந்நிலையில் பிரபல தமிழ் வார இதழ் ஒன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் இறங்கியுள்ளதால் அவரிடம் பேட்டி எடுத்தது. அந்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு அசராமல் பதில் அளித்த உதயநிதி ஸ்டாலினிடம், உங்க  பெரியப்பாவும் அப்பாவும் இணைப்பு சாத்தியமா? உங்களின் பங்களிப்பு என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்காமல், அது பெரியவர்களின் சமாச்சாரம். நான் என்ன சொல்லுவது? பிளீஸ்.. எனக்கூறி நைஸாக நழுவி விட்டார். அதே நேரத்தில் அழகிரியின் மகன் துரைதயாநிதியுடன் உள்ள தொடர்பு, நட்பு இன்றையச் சூழ்நிலையில் எப்படி உள்ளது? என்ற கேள்விக்கு சினிமாவில் பிஸியா இருப்பதனாலோ என்னமோ, அவருடன் பேசி சில மாதங்கள் ஆகின்றன என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்