உக்ரைனில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுகிறார்களா? டிடிவி

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (17:33 IST)
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி கோரிக்கை. 

 
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.
 
உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை விமானம் மூலமாக மீட்க மத்திய அரசு ஆபரேஷன் கங்கா திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன்மூலம் உக்ரைனின் எல்லைப்பகுதிகள் வழியாக இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உக்ரைனில் சிக்கித் தவித்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் அவசரமாக வெளியேற்றும் திட்டத்தை பகிர்ந்து கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார். அதோடு சில மாணவர்கள் எல்லையை கடக்க முயன்றபோது இராணுவத்தால் துன்புறுத்தப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.
 
இதனைத்தொடர்ந்து தற்போது அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன், உக்ரைனில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும்.
 
தமிழக அரசு இப்பிரச்னையில் கூடுதல் அக்கறைக் காட்டுவது அவசியம். மீட்கப்பட்டு தாயகம் திரும்பும் மாணவர்களுக்கு விமானநிலையத்தில் நின்றுகொண்டு தமிழக அமைச்சரும், அதிகாரிகளும் பூங்கொத்து கொடுத்து வரவேற்பதற்குப் பதிலாக டெல்லிக்குச் சென்று உக்ரைனில் சிக்கித்தவிக்கும் எஞ்சிய மாணவர்களை மீட்பதற்கான பணிகளை மத்திய அரசோடு இணைந்து மேற்கொள்வதுதான் இப்போதைய உடனடித்தேவை. எனவே, வெற்று விளம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆக்கப்பூர்வமாக செயல்படவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்