தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் ஆறுதல்!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (13:02 IST)
தஞ்சை களிமேட்டில் நேரிட்ட தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் ஆறுதல் தெரிவித்துள்ளார். 

 
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் கோவிலில் 94வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர்வலம் விமரிசையாக நடைபெற்றது. தேர் நகர்வலம் முடிந்து கோவிலை நெருங்கியபோது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியது. இதனால் தேரினுள் நின்ற 11 பேர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதால் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் இது குறித்து டிடிவி தினகரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் நேரிட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் உடல் நலம் பெற்றிட பிராத்திக்கிறேன். இவ்விபத்தில் பலியானோருக்கு நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாது, உரிய முறையில் விசாரித்து விபத்திற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். 
 
இனிவரும் காலங்களில் மக்கள் பெருமளவில் கூடும் திருவிழாக்களில் மிகுந்த கவனத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்