தஞ்சை தேர் திருவிழா விபத்து நடந்தது எப்படி? – நேரில் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

புதன், 27 ஏப்ரல் 2022 (08:27 IST)
தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் கோவிலில் 94வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு தேர்வலம் விமரிசையாக நடைபெற்றது. நடு இரவில் தொடங்கி அதிகாலை வரை நடக்கும் இந்த தேர் பவனியை காண சுற்றியிருந்த கிராமங்களிலிருந்தும் மக்கள் வந்திருந்தனர்.

இந்நிலையில் தேர் நகர்வலம் முடிந்து கோவிலை நெருங்கியபோது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியது. இதனால் தேரினுள் நின்ற 11 பேர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதால் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய அக்கிராம மக்கள், சமீபத்தில் அந்த சாலை அகலப்படுத்தப்பட்டிருந்ததாகவும், தேரை இழுத்து திருப்ப வேண்டிய நிலையில் சாலை அகலமாக இருந்ததால் வளைத்து திருப்பலாம் என தேரை சாலை ஓரத்திற்கு நகர்த்தியபோது மேலே இருந்த உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சை புறப்பட உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்