தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் கோவிலில் 94வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு தேர்வலம் விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் தேர் நகர்வலம் முடிந்து கோவிலை நெருங்கியபோது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியது. இதனால் தேரினுள் நின்ற 11 பேர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதால் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விபத்துக்கு காரணம் என்னவென தீயணைப்புத்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். எந்தவொரு திருவிழா நடத்துவதற்கு முறையான அனுமதி பெறவேண்டும். ஆனால் அப்பர் கோவில் திருவிழா மற்றும் தேரோட்டம் தொடர்பாக விழா குழுவினர் மற்றும் நிர்வாகத்தினர் அனுமதி பெறவில்லை.
தேரில் அலங்கார பொருட்கள் அதிக அளவில் பொருத்தப்பட்டு இருந்துள்ளது. குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் தேரின் மேல் பகுதி செல்லும் போது மின்சார எச்சரிக்கை இருந்திருக்க வேண்டும். ஆனால் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. தேரின் மேல் பகுதி உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் அலங்கார பொருட்களில் உடனே தீப்பற்றி, தேரின் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் பாய்ந்துள்ளது.