வங்கக் கடலில் நாளை புதிய புயல் சின்னம் உருவாகும் : இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..!

Mahendran
புதன், 4 செப்டம்பர் 2024 (13:04 IST)
வங்கக் கடலில் நாளை புதிய புயல் சின்னம் தோன்ற இருப்பதாக கூறப்படும் நிலையில் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் நாளை அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் இதன் காரணமாக ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஏற்கனவே நேற்று இரவு முதல் மழை பெய்த நிலையில் இன்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக உருவாகி, புயலாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்