தமிழ் தெரியாவிட்டால் வேலை கிடைக்காது! : டி.என்.பி.எஸ்.சி தேர்வில் அதிரடி மாற்றம்

Webdunia
ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (12:57 IST)
தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கட்டுப்பாட்டு அதிகாரி கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்து தேர்வுகளில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பட்டதாரிகள் கலந்து கொண்டு தேர்வுகள் எழுதி வருகின்றனர். இந்நிலையில் இதுவரை இருந்த பாட முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது தேர்வாணைய குழு. இது மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாடத்திட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக பலர் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் “ டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு பாடத்திட்டத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படுத்தவில்லை. தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து சில மாற்றங்கள் செய்துள்ளோம்.

முன்னர் தமிழ் வழி பொது அறிவு வினாக்கள் மற்றும் ஆங்கில வழி பொது அறிவு வினாக்கள் மட்டுமே கேட்கப்பட்டு வந்தன. தமிழ் சரியாக எழுத, படிக்க தெரியாதவர்களும் இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து தேர்வில் இறுதி கட்டம் வரை சென்று விட முடியும். தற்போது தமிழ் வரலாறு, இலக்கியம் ஆகியவற்றை முக்கிய பாடமாக சேர்த்துள்ளோம். தமிழ் மொழி சார்ந்து 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே தமிழ் எழுத, படிக்க தெரியாதவர்கள் எளிதில் வேலைக்கு தேர்வாக முடியாது.

அதே சமயம் கிராமப்புற மாணவர்களும் படித்து எளிதில் வெற்றி பெருமளவில் 6ம் வகுப்பு பாடத்திட்டத்தை மையப்படுத்தியே வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே குரூப் 2 தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாகவோ, தேர்வு கடினப்படுத்தப்படுவதாகவோ கூறப்படுவது ஏற்புடையது அல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் பல தமிழக இளைஞர்கள் குரூப் 1,2,3 மற்றும் 4 ஆகிய தேர்வுகளை எழுதி வருகின்றனர். அதில் சில ஆயிரம் பேர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்