தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பட்டாசுகளும், பலகாரங்களும்தான். பலகாரங்கள் செய்ய அத்தியாவசியமாய் பயன்படுவது வெல்லம். சமீப காலத்தில் கரும்பு சாகுபடி வெகுவாக குறைந்துவிட்டதால் வெல்லம் விலை உயர்ந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் சாகுபடி செய்யப்படும் கரும்புகளில் முக்கால்வாசி சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. மீத கால்வாசி கரும்புகளே கரும்பு சாறு கடைகளுக்கும், குடிசை தொழிலாக வெல்லம் செய்பவர்களுக்கும் அனுப்பப்படுகின்றன. சமீப காலங்களில் கரும்பு மகசூலுக்கு ஏற்ற தொகையை சர்க்கரை ஆலைகள் கொடுக்காமல் நிலுவையில் வைத்திருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பல விவசாயிகள் கரும்பு தவிர மற்ற பயிர்களை பயிரிட்டுள்ளதால் சென்ற ஆண்டை விட கரும்பு மகசூல் தற்போது குறைந்துள்ளது.
தீபாவளி, ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்கள் நெருங்கும் சமயம் என்பதால் வெல்லத்திற்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. வெல்லம் தயாரிக்கும் குடிசை தொழிலகங்கள் கரும்பு வரத்து குறைவாக இருப்பதால் வெல்லம் விலையை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளிலும், மளிகை கடைகளிலும் கிடைக்கும் வெல்லத்தை தாண்டி வீதிகளில் தெருவோரமாக விற்கபடும் நேரடி விற்பனைக்கும் வரவேற்பு அதிகரித்துள்ளது.
இதனால் கிலோ வெல்லம் தற்போது 90 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தீபாவளி நெருங்கும் சமயங்களில் வெல்லம் விலை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெல்லத்திற்கு மாற்றாக கருப்பட்டியையும் பலர் இனிப்புகளுக்கு பயன்படுத்த தொடங்கியிருக்கின்றனர். கருப்பட்டி வெல்லத்தை தயாரிப்பவர்கள் கிராமப்பகுதிகளில் இருந்து அதை பக்கத்து ஊர்களுக்கு கொண்டு சென்று நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், திருத்துறைப்பூண்டி பகுதிகளில் கருப்பட்டி விற்பனைக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
பல ஸ்வீட், பேக்கரி நிறுவனங்களும் பழமையான உணவு வகைகளை கடைகளில் விற்பதற்காக வெல்லத்தை ஒட்டு மொத்தமாக கொள்முதல் செய்து வருவதால் இந்த தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் அடுத்த சில வாரங்களில் கரும்பு அறுவடை நடைபெற இருப்பதால் வெல்லத்திற்கு தட்டுபாடு ஏற்படாது எனவும் நம்பப்படுகிறது.