ரெட் பஸ் ஆப் முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் மூலம் பயணிகள் வழக்கம் போல் பயணிக்கலாம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை திடீரென அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சார்பில் அறிவிப்பு வெளியானது. ரெட் பஸ் மூலம் ஜனவரி 12 முதல் 17 வரை முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு செல்லாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து நேற்று இரவு சுமார் 3 மணி நேரத்தில் மீண்டும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டனர். அதில், ரெட் பஸ் ஆப் மூலம் முன்பதிவு செய்த பயணிகள் வழக்கம் பயணிக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதனிடையே ரெட் பஸ் நிறுவனம் பயணிகளுக்கு இது வெறும் வதந்தி, இதை நம்ப வேண்டாம் என்று குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்ப தொடங்கியது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொருளாளர் மாறன் கூறியதாவது:-
விழாக்காலங்களில் திடீரென தோன்றும் சில பஸ் நிறுவனங்களும் ரெட் பஸ் நிறுவனத்தில் பதிவு செய்து பஸ்களை இயக்குவது வழக்கம். ஆனால், இதுபோன்ற பஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெறுவதில்லை. ஓட்டை உடைசலாகவும், ஒழுகும் பேருந்துகளாகவும் இவை இருக்கும்.
ரெட் பஸ் நிறுவனத்துக்கு இதுபோன்ற புகார்கள் வந்ததால், சுமார் 40 சிறு பஸ் நிறுவனங்களை தனது உறுப்பினர் பதிவில் இருந்து ரெட் பஸ் நிறுவனம் நீக்கிவிட்டது.
இதனால் பொங்கல் பண்டிகைக்கு அந்த பஸ் நிறுவனங்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லை. இந்த காழ்ப்புணர்ச்சியில் இதுபோன்ற தவறான தகவலை பரப்பிவிட்டனர், என்று கூறினார்.