கோவையில் நான் பிரச்சாரம் செய்வதை பாஜகவின் தடுக்கின்றனர் என்று திருமுருகன் காந்தி தனது சமூக வலைத்தளத்தில் குற்றச்சாட்டு தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலையை வெற்றி பெற விடக்கூடாது என திமுக, அதிமுக கட்சிகள் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த நிலையில் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி கோவையில் பிரச்சாரம் செய்ய வந்த போது தன்னை பாஜகவினர் தடுத்து நிறுத்தியதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கோவையில் பரப்புரையை தடுக்க பாஜகவினர் குவிகின்றனர். பரப்புரை வாகனத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டு மிரட்டும் கூட்டத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டு பரப்புரையை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறோம். எமது ஊரில், எமது நாட்டில் எம்மை மிரட்ட எவனும் பிறக்கவில்லை. வீதியில் எதிர்கொள்வோம் பாசிச கும்பலை. பாஜக கும்பலுக்கு ஆதரவாக வந்த காவல்துறையை வாதிட்டு ஒதுக்கி நிறுத்திவிட்டு பரப்புரை வாகனத்தை நிறுத்தி உரையாற்ற ஆரம்பித்துள்ளோம்.
நேரில் வந்த பாஜக மாவட்ட பொறுப்பாளரையும், பாரத் மாதாகீ ஜே என முழக்கமிட்ட கும்பலை ' ஜெய் பீம்!', 'பெரியார் வாழ்க!', ' தமிழ்நாடு தமிழருக்கே!, வெளியேறு வெளியேறு, வட நாட்டானே வெளியேறு!!' என்கிற முழக்கத்தோடு தோழர்கள் விரட்டியடித்தனர்.
பரப்புரை நடக்கிறது, காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. பாஜக கும்பல் குவிந்து கொண்டிருக்கிறது. எதற்கும் அஞ்சாமல் பரப்புரை நடக்கிறது. தோழர் குடந்தை அரசன், தமிழக மக்கள் சனநாயக கட்சியின் அபு, தமிழ் சிறுத்தைகளின் அகத்தியன் ஆகியோர் உடனிருக்கிறார். எதற்கும் அஞ்சப்போவதில்லை.
இது பெரியார்,பிரபாகரன், அண்ணலின் வழி வந்த படை. எதிர்த்து நிற்போம். துணிந்து வெல்வோம்