திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே திருமலைக்கேணி கந்த சஷ்டி விழாவில் 2ம் நாள் செவ்வாய்க்கிழமை சிவபூஜை அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நத்தம் திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோயில் கந்த சஷ்டி விழா திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 2ம் நாள் செவ்வாய்க்கிழமை மூலவருக்கு பால், பழம், பன்னீர்,மஞ்சள், சந்தனம், ஜவ்வாது, விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனைகள் நடந்தது.
தொடர்ந்து முருகன் சிவலிங்கத்திற்கு பூஜை செய்வது போல் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிவபூஜை திருக்காட்சியில், முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கோவிலை சுற்றிவர வீதி உலா நடந்தது. சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புதன்கிழமை கந்த சஷ்டி விழாவில் சிவ உபதேச திருக்காட்சியும், விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் நவ.18ல் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.பூஜைகளை சதாசிவ குருக்கள் குழுவினர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறக்காவலர் அழகுலிங்கம், செயல் அலுவலர் பாலசரவணன் உள்ளிட்ட விழா குழுவினர் செய்து வருகின்றனர்.