பெட்ரோல் பங்க் தடையில்லா சான்று வழங்குவதற்காக ரூ 1 லட்சம் லஞ்சமாகப் பெற்ற தாசில்தார்!

J.Durai
வியாழன், 30 மே 2024 (16:03 IST)
மதுரையை சேர்ந்த சுப்ரமணி என்பவர், ஆண்டிபட்டியை அடுத்துள்ள தேக்கம்பட்டி என்ற கிராமத்தில் இருக்கும் அவருக்கு சொந்தமான இடத்தில் பெட்ரோல் பங்க் வைப்பதற்கான வேலைகளை செய்து வந்தார். 
 
பெட்ரோல் பங்க் வைப்பதற்கு வருவாய்த்துறையின் தடையில்லா சான்று பெற வேண்டி சுப்பிரமணி ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் காதர் ஷெரிப்பிடம் விண்ணப்பித்திருந்தார். 
 
தடையில்லா சான்று வழங்குவதற்கு தனக்கு ரூ 1 லட்சம் பணம் வேண்டும் என சுப்பிரமணியிடம் தாசில்தார் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுப்பிரமணி தேனி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுந்தர்ராஜனிடம் புகார் கொடுத்தார். 
 
இதனை அடுத்து ஆண்டிபட்டி வட்டாட்சியர் காதர் ஷெரிபை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்தனர். அதன்படி சுப்பிரமணியிடம் ரசாயனம் தடவப்பட்ட ஒரு லட்சம் ரொக்க பணத்தை போலீசார் கொடுத்து அனுப்பினர்.
 
பணத்துடன் சென்ற சுப்பிரமணியனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தூரத்தில் இருந்த படி கண்காணித்தனர்.
 
வட்டாட்சியர் அலுவலகம் சென்ற சுப்பிரமணி ரசாயனம் தடவிய ஒரு லட்ச ரூபாய் பணத்தை தாசில்தாரிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாசில்தார் காதர் ஷெரிப்பை கையும் களவுமாக பிடித்தனர். 
 
இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுந்தர்ராஜன் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட போலீசார் தாசில்தார் அறைக்குள் சென்று விசாரணை நடத்தினர்.
 
விசாரணை நடந்து கொண்டிருந்த போது தாசில்தார் காதர் ஷெரிப்பிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து தாசில்தார் காதர் ஷெரிப்பை போலீஸ் ஜிப்பில் ஏற்றிக்கொண்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
 
இந்த லஞ்ச புகார் குறித்து தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இந்த சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்