தாயைப் பிரிந்த குட்டி யானையை மீண்டும் அதனுடன் சேர்க்கும் முயற்சியில்- வனத்துறையினர் நான்காவது நாளாக தீவிரம்!

J.Durai
சனி, 8 ஜூன் 2024 (10:29 IST)
கடந்த மே மாதம் 30 ஆம் தேதி மருதமலை வனப்பகுதியில் உடல் நலம் குன்றி விழுந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
 
அதனுடன் மூன்று மாத குட்டி யானை ஒன்று இருந்த நிலையில் தாய் சிகிச்சையில் இருந்த போது குட்டி யானை தாயிடமிருந்து பிரிந்து சகோதர யானையுடன் வனத்திற்குள் சென்றது. இதனை அடுத்து தொடர் சிகிச்சைக்கு பிறகு தாய் யானை மீண்டும் வனத்திற்குள் அனுப்பப்பட்டது. குட்டி தாயுடன் சேர்ந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாயுடன் சேரவில்லை. குட்டி யானை சகோதர யானை உடன் வேறொரு கூட்டத்துடன் சுற்றித் திரிந்தது.
 
வனத்துறையினர் தாய் மற்றும் குட்டியை கண்காணித்து வந்த நிலையில் குட்டியானை கூட்டத்திலிருந்து பிரிந்ததை அடுத்து  அதனை மீண்டும் தாயுடன் இணைக்க வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.
 
நான்காவது  நாளான இன்றுஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து யானை பாகன்கள் வரவழைக்கப்பட்டு குட்டியை தாயிடம் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டுள்ளனர்.  தாய் யானை இருப்பிடத்தைக்  கண்டுபிடித்து விட்ட நிலையில் குட்டியை அதனுடன் சேர்க்க தீவிரமாக போராடி வருகின்றனர்.  
 
குட்டி யானை தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் நிலையில் அதற்கு புட்டி பால் கொடுத்து வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்