கரையை கடந்தது டானா புயல்.. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து பாதிப்பு..!

Siva
வெள்ளி, 25 அக்டோபர் 2024 (07:16 IST)
வங்க கடலில் உருவாகிய டானா புயல் சற்றுமுன் கரையை கடந்ததாகவும், கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசியதால் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாக ஒடிஷா, மேற்குவங்கத்தில் பாதுகாப்பற்ற இடங்களில் இருந்த லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், டானா புயல் ஹபாலிகாத்தி மற்றும் டமாரா அருகே வடக்கு ஒடிசாவில் 12 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புயல் கரையை கடக்கும்போது 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும், அதிகாலை இந்த புயல் கரையை கடந்த நிலையில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புயல் கரையை கடக்கும்போது பலத்த காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், தற்போது மீட்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் எந்த விதமான உயிர் சேதமும் இல்லை என்றும், இருப்பினும் பொருள் சேதம் அதிகம் இருப்பதால் அதுகுறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்