சாக்கடையில் இருந்த நாய்க்குட்டியை மீட்ட கபடி வீரர்.. காப்பாற்றியவரையே நாய் கடித்ததால் பரிதாப பலி..!

Mahendran

வியாழன், 3 ஜூலை 2025 (15:26 IST)
சாக்கடையில் தத்தளித்துக் கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்றை காப்பாற்றியபோது, அது கடித்ததால் ரேபிஸ் நோய் தாக்கி, கபடி வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரபிரதேசத்தை சேர்ந்த கபடி வீரர் விஜய் சோலங்கி என்பவர், சமீபத்தில் ஒரு நாய்க்குட்டி சாக்கடையில் தத்தளித்து கொண்டிருப்பதை கண்டு அதை மீட்க சென்றுள்ளார். அப்போது, அந்த நாய்க்குட்டி சோலங்கியை கடித்துள்ளது. ஆனால், அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தடுப்பூசியும் போட்டுக்கொள்ளாமல் அலட்சியமாக இருந்துள்ளார்.
 
இதன் விளைவாக, கடந்த மாதம் 26 ஆம் தேதி விஜய் சோலங்கிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நாய்க்கடி குறித்து அவர் கவனக்குறைவாக இருந்ததும், ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி தொற்று நாளுக்கு நாள் மோசமடைந்ததும் தெரியவந்தது. ஒரு கட்டத்தில், அவரை மருத்துவர்களாலும், செவிலியர்களாலும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
கபடி போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று, கபடியில் ஒரு பெரிய வீரனாக வர வேண்டும் என்ற கனவில் இருந்த விஜய் சோலங்கி, ஒரு சின்ன நாய்க்குட்டியைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தை கொண்டதால், கவனக்குறைவால் தனது உயிரை இழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்