கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட மாயனூர் காவிரி ஆற்றில் இன்று ஆடிப்பெருக்கு என்பதால் பக்தர்கள் கூட்டம் கரையோரம் அலைமோதியது.
மேலும், மாயனூர் செல்லாண்டியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விஷேச பூஜைகள் செய்யப்பட்டது. ஆடிப்பெருக்கு என்றழைக்கப்படும் ஆடி 18 ம் தினத்தையொட்டி, பயிர் செழிக்க வளம் அருளும் நீருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆற்றங்கரைகளிலும், நதிக்கரைகளிலும் ஆடிப் பெருக்கை மக்கள் கொண்டாடினார்கள்.
மேலும் இந்த தினத்தை கொண்டாடப்படுவதினால் ஆடி மாதம் காவிரியைச் சுற்றியுள்ள, 18 படித்துறைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என்பதால், இந்த 18ஐ கணக்கில் கொண்டு ஆடி 18ம் நாளை ஆடிப்பெருக்காக கொண்டாடுவது வழக்கம். புனித நீரான கங்கைக்கு அடுத்த படியாக விளங்கும் காவிரி நதிக்கரையோரங்களில் உள்ள மாயனூர், குளித்தலை, இலாலாபேட்டை ஆகிய ஊர்களில், இவ்விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த விஷேச பூஜைகள் செய்வதினால் காவிரி நதி வற்றாமல் விவசாயத்திற்கு நீர் தரும் காவிரித் தாய்க்கு காணிக்கை தரும் என்பதினால் ஆற்றங்கரைகளில் நடக்கும் பூஜைக்கு பின்னர், அனைவரும் ஆற்று நீரில் தலையில் சில்லறை காசினை வைத்து மூழ்கி எழுவர்.
மேலும் இதே போல இந்நாளில் புதுமண தம்பதிகள் இந்த ஆடி 18-ல், ஆற்றங்கரைகளில் பூஜையில் வைத்த மஞ்சள் சரடு கொண்டு திருமணமான பெண்கள் திருமாங்கல்யத்தை மாற்றிக் கொள்ளும் சடங்கினை நடத்திக்கொண்டனர். பழைய மாங்கல்யத்தை, எடுத்து விட்டு புது மாங்கல்யத்தை அணிந்து கொண்டு கணவனுக்காக வழிபடுவார்கள். திருமணம் ஆகாதவர்கள், அம்மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டி கொண்டு நல்ல வரன் கிடைக்க வழிபடுவது வழக்கம்.
உழவர்களை பொறுத்த வரையில், ஆடி மாதத்தில், விவசாயம் செய்வதற்கு ஏதுவாக ஆற்று நீர் பொங்கி வருவதால் இந்நாளை மிக விமரிசையாக படையலிட்டு வழிபட்டனர். மேலும் இந்த ஆடி 18 மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி கரையோரங்களில் விழாக்கோலம் பூண்டது போல் இருந்தது. மேலும் மாயனூர் செல்லாண்டியம்மன் கோயிலில் இந்நிகழ்ச்சியையொட்டி விஷேச பூஜைகளும், சிறப்பு தீபாராதனைகளும் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு காவிரி நதியில் புனித நீராடி வழிபட்டனர்.