அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் வீட்டிற்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், எம்ஜிஆர்-ஜெயலலிதா படங்கள் சிறியதாகவும், எடப்பாடி பழனிசாமியின் படம் பெரியதாகவும் இருந்ததை செங்கோட்டையன் சுட்டிக்காட்டியதை அடுத்து, இரு தரப்புகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அதிமுகவை செங்கோட்டையன் கைப்பற்ற திட்டமிட்டு வருவதாகவும், சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியவர்களுடன் இணைந்து அதிமுகவை அவர் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிமுக தலைவர்களும் அவருக்கு மறைமுக ஆதரவு தருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் வீட்டிற்கு முன் எச்சரிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாகவும், அவருடைய வீட்டில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.