தமிழகத்தில் ஆபரேஷன் குபேரா; சீமான் கோரிக்கை

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (11:06 IST)
கந்துவட்டி சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், 4 பேர் தீக்குளித்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.


 

 
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அச்சம்புதூர் கிராமத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கந்துவட்டி தொடர்பாக தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தீக்குளித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெள்ளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
 
இசக்கிமுத்து என்பவர் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் சில ஆண்டுகளுக்கு முன்பு கந்து வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். அதற்குக் அதிகப்படியான வட்டிவீதம் போட்டு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் இசக்கிமுத்துவிடமிருந்து கறந்திருக்கிறார்கள். 
 
மேலும் அந்த குடும்பத்தினருக்கு தொடர்ந்து மிரட்டலும், அச்சுறுத்தலும் விடுத்து வந்திருக்கிறார்கள். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதற்கு காவல்துறையினர் 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். 
 
ஆனால் எந்த பயனும் இல்லாத காரணத்தால் மனமுடைந்த இசக்கிமுத்து தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகே தீக்குளித்துள்ளார். இது தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது. நீண்டநெடிய காலமாகக் கந்துவட்டிக் கொடுமைகள் நடந்து வருவது தெரிந்தும் அரசு கண்டுகொள்ளாது இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. 
 
அதீத வட்டி வசூலிப்பதைத் தடைசெய்ய 2003 ஆம் ஆண்டுக் கொண்டுவரப்பட்ட கந்து வட்டித்தடைச் சட்டம் இருந்தும் இதுபோன்ற கொடுமைகள் நடக்கிறதென்றால் எதற்கு அந்தச் சட்டம்? 
 
இசக்கிமுத்துவின் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் அச்சம்புதூர் காவல்துறையினர் மீதும் அதுதொடர்புடைய அதிகாரிகள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
கேரளாவில் கந்துவட்டியை ஒழிக்க முன்னெடுக்கப்பட்ட ஆபரேஷன் குபேரா போல தமிழகத்திலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிப்பிரிவு ஒன்றை அமைத்து உடனடியாக கந்துவட்டியை முற்றாக ஒழிக்க வேண்டும். இசக்கிமுத்துவின் குடும்பத்திற்கு உரிய சிகிச்சை அளித்து இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்