சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைவிதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி சசிகலா சிறையில் பல்வேறு வசதிகளை பெற்று சொகுசாக வாழ்ந்து வருகிறார் என தகவல்கள் வந்தவாறே உள்ளன.
சிறைத்துறை டிஐஜி ரூபா இது தொடர்பாக அறிக்கை அனுப்பிய பின்னர் பூதாகரமாக வெடித்த இந்த விவகாரத்தில் நாளுக்கு நாள் அதிர்ச்சி அளிக்கும் ஒவ்வொரு விஷயமாக வெளிவந்தவாறே உள்ளன.
சசிகலா சிறையில் நைட்டியுடன் ஜாலியாக வலம் வருவது, சுடிதார் அணிந்துகொண்டு வெளியே ஷாப்பிங் சென்று வருவது என வீடியோக்கள் மற்றும் சிறையில் சசிகலாவுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகளின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.
ஆனால் இவற்றிற்கு அதிமுகவினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். சசிகலாவின் தீவிர விசுவாசியான கர்நாடக மாநில அதிமுக பொதுச்செயலாளர் புகழேந்தி இந்த வீடியோக்கள் பாகுபலியை மிஞ்சும் கிராஃபிக்ஸ் வீடியோக்கள் என கூறினார்.
இந்த வீடியோக்கள் கிராஃபிக்ஸ் என அதிமுகவினர் கூறினாலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்கள் சசிகலாவுக்கு எதிராகவே அமைந்துள்ளது. இந்த விஷயத்தில் நிச்சயம் சசிகலா சிக்குவர் என்றே கூறப்படுகிறது.
பெங்களூரை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவலில், சசிகலா சிறைக்குள் சென்ற 107 நாட்களில் 82 பார்வையாளர்களை சந்தித்திருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.
கர்நாடக சிறை விதிகளின்படி தண்டனை பெற்ற ஒரு கைதி இரண்டு வாரத்திற்கு ஒரு பார்வையாளரை மட்டுமே சந்திக்க அனுமதி உண்டு. அதன்படி சசிகலா இந்த காலகட்டத்தில் வெறும் 8 பார்வையாளரை மட்டும் தான் சந்திக்க முடியும். ஆனால் சசிகலா 82 பார்வையாளர்களை சந்தித்திருப்பது சட்டத்துக்கு எதிரானது.
வீடியோக்களை கிராஃபிக்ஸ் என கூறினாலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சட்டப்படி பெற்ற இந்த ஆவணங்களை புறம் தள்ளிவிட முடியாது. இந்நிலையில் இந்த ஆவணங்களை ஆதாரமாக வைத்து சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.