நிவாரண நிதியாக உடனடியாக ரூபாய் 5060 கோடியை வழங்க வேண்டும் -வி.சி.க தலைவர் திருமா

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (20:10 IST)
மிக்சாங் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்திட மாநில அரசு கேட்டுள்ள இடைக்கால நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கிட கோரி இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் கடிதத்தை வழங்கியுள்ளார்.

அதில்,''மிக்சாங் புயல் - தமிழ்நாட்டிற்கு உடனடியாக இடைக்கால நிவாரண நிதியை வழங்கிட கோரி. மிக்சாங் புயலின் காரணமாக இரண்டு நாள் இடைவிடாமல் பெய்த பெரு மழையால் தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. புயல் கடற்கரையின் அருகாமையில் இருந்ததால் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது, ஏறத்தாழ 1200 மீன்பிடி படகுகளும், 3500 க்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் வலைகளும் சேதமடைந்துள்ளன. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னை பெருநகரம் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. சாலைகளும் வடிகால்களும் சேதமடைந்திருக்கிறது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். புறநகர் பகுதிகளில் ஏராளமான பகுதிகள் நீரில் மூழ்கியதால் மக்கள் மேடான பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சாலைகளில் தெருக்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தினரும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் படகுகளின் மூலமாக மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 9 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் 61,666 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 11 லட்சம் உணவுப் பொட்டலங்களும், அத்தியாவசிய பொருட்களான பால் உள்ளிட்ட பொருட்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்ய இடைக்கால நிவாரண நிதியாக உடனடியாக ரூபாய் 5060 கோடியை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மாநில அரசு கோரியுள்ள நிவாரணத் தொகையை குறைத்திடாமல் உடனடியாக இந்திய ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த சில காலமாகவே தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து மாநில அரசுகள் கேட்கும் நிவாரணத் தொகை ஒதுக்கப்படுவதில்லை, குறைவான அளவிலேயே நிவாரண நிதி வழங்கப்படுகிறது. புயலால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு உடனடியாக இடைக்கால நிவாரணத்தை வழங்கிட வேண்டும் எனவும், புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்திட உடனடியாக ஒரு மத்திய குழுவை சென்னைக்கு அனுப்பிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்''என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்