திருக்கோயில்களில் பாதுகாப்பு அறை கட்டுவதற்கு ரூ. 308.70 கோடி ஒதுக்கீடு!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (12:18 IST)
திருக்கோயில்களில் பாதுகாப்பு அறை கட்டுவதற்கு  ரூபாய் 10 லட்சம் வீதம் 3087 திருக்கோயில்களுக்கு ரூ. 308.70 கோடி தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தகவல்.
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (25.10.2021) சென்னை கோடம்பாக்கம் புலியூர் அருள்மிகு பரத்வாஜேஸ்வரர் திருக்கோயிலில் (திருவாலீஸ்வரம்) உலோக திருமேனிகள் பாதுகாப்பு அறையை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் திறந்து வைத்தார்கள்.
 
இந்த நிகழ்வில் அமைச்சர் அவர்கள் பேசும்போது, தமிழ்நாட்டில் திருக்கோயில்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் களவு எச்சரிக்கை மணி பொருத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு அறை கட்டுவதற்கு ஒரு திருக்கோயிலுக்கு ரூபாய் 10 லட்சம் வீதம் 3087 திருக்கோயில்களுக்கு பாதுகாப்பு அறை கட்டுவதற்கு ரூ. 308.70 கோடி தொகையினை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக நிதியிலிருந்து 01.11.2018 அன்று ஒதுக்கப்பட்டுள்ளது.  
 
முதற்கட்டமாக தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், பந்தநல்லூர், அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் பாதுகாப்பு அறை ரூபாய் 22.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அருள்மிகு சென்னை கோடம்பாக்கம் புலியூர் அருள்மிகு பரத்வாஜேஸ்வரர் திருக்கோயிலில் ஆகம விதிகளின்படி முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய வடிவமைப்பில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு அறை 22 சிலைகள் வைக்கும் அளவிற்கு கட்டப்பட்டுள்ளது. விலை மதிப்பு மிக்க சிலைகள் பாதுகாப்பாக இருக்க இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3085 திருக்கோயில்களில் அந்தந்த திருக்கோயில்களின் ஆகமம் மற்றும் பழக்க வழக்கங்களின்படி விரைவில் கட்டி முடிக்கப்படும்.
 
இக்கோயிலை சுற்றி இருக்கும் மதுபான கடைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தேவாரம், திருவாசகம் போன்ற ஆன்மீக வகுப்புகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
 
சிலர் நான் தொகுதி அரசியல் செய்வதாக கூறுகிறார்கள். அவர்களுக்கு நான் கூறிக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் 25 மேற்பட்ட மாவட்டங்களில் இதுவரை 130 மேற்பட்ட கோயில்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளேன். கொரோனா தொற்று முழுமையாக முடிந்தவுடன் பக்தர்களை பக்தி சுற்றுலா அழைத்து செல்லப்படும். சிதம்பரம் நடராஜர் கோயிலை பற்றி முக நூலில் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். நீதி மன்றத்தில் சிதம்பரம் கோயில் பற்றிய வழக்கு நடந்து கொண்டிருப்பதால், பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இறைவனை வழிபடும் வகையில் இந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
பாதுகாப்பு அறை (Strong room) அமைப்பதற்கான அரசாணை 2017ல் வெளியிடப்பட்டும், அதிமுக அரசு 4 வருடமாக பாதுகாப்பு அறை (strong room) அமைப்பதற்கான பணியில் ஈடுபட வில்லை. தற்போது நாங்கள் அந்த பணிகளை விரிவுபடுத்தி வருகிறோம். வெளிப்படை தன்மையோடு, வேண்டியவர், வேண்டாதவர் என பார்க்காமல் திறமையான பேராசிரியர்களை கல்லூரிகளில் நியமிக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அடுத்த 3 கல்லூரி பேராசிரியர்களும் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். 
 
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சட்டப்படி வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்டு கொண்டு வருவதற்கான ஆலோசனைகளை நடத்தி வருகிறது. வெளிநாட்டு விவகாரம் என்பதால் அவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே பாரத பிரதமர் அமெரிக்கா சென்ற போது கொண்டு வரப்பட்ட 11 சிலைகள் தமிழகத்தை சேர்ந்தவையாக இருப்பதாக கூறப்படுகிறது. 
 
அது பற்றி ஒன்றிய அரசுடன் பேசியுள்ளோம். விரைவில் சிலைகள் மீட்டுக் கொண்டு வரப்படும். எவ்வளவு சிலைகள் திருடப்பட்டுள்ளன எவ்வளவு சிலைகள் எந்தெந்த அருங்காட்சியகத்தில் உள்ளன என்கின்ற கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கின்றது. இப்பணிகள் முடிந்தவுடன் மீட்கப்பட்ட சிலைகள் பற்றி தெரிவிக்கப்படும்.
 
தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களின் மேம்பாடு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஒவ்வொரு மண்டலமாக ஆய்வு செய்து வருகிறோம். சென்னை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மண்டலங்கள் முடிந்துள்ளது. தற்போது மற்ற மண்டலங்களில் உள்ள திருக்கோயில்களில் ஆய்வு செய்யப்பட்டு திருக்கோயில்களின் தேவை அடிப்படையில் பணிகள் தொடங்கப்படும்.
 
தமிழ்நாடு முழுவதும் திருக்கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட நிலங்கள் மூலம் திருக்கோயிலுக்கு வருவாயை பெருக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
47 முதுநிலை திருக்கோயில்களில் தல வரலாறு குறித்த புத்தகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. முதற்கட்டமாக பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தலவரலாறு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மற்ற கோயில்களிலும் வெளிடப்படும்.
 
இந்த நிகழ்வின்போது சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி. சந்திரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப.,  ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன், சென்னை மண்டல இணை ஆணையர்   திருமதி ஹரிப்ரியா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்