தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை - ராம் மோகன் ராவ்

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2016 (12:02 IST)
தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையை தொடர்ந்து, தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவுக்கும் இடையே தொழில் ரீதியான  உறவு இருப்பதாக தெரிய வந்தது. 


 

 
இதனைத் தொடர்ந்து ராம் மோகன் ராவ் வீடு, அவரின் மகன் வீடு மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. 
 
இந்நிலையில், இன்று அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: 
 
வருமான வரித்துறையினர் கொண்டு வந்த வாரண்டில் என் பெயர் இல்லை. ஆனாலும் என் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்தனர். என்னை வீட்டுக் காவலில் வைத்தனர். 
 
என்னைக் காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது.  என் உயிருக்கு சிலர் குறி வைத்துள்ளனர். எனக்கு தகுந்த பாதுகாப்பில்லை.  சேகர் ரெட்டிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது தமிழகத்தில் பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. 
 
என் மீது எந்த தவறும் இல்லை. நான் நேர்மையானவன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இத்தனை வருடங்களாக பயிற்சி பெற்றவன். அவர் உயிரோடு இருந்திருந்தால் இது நடந்திருக்க முடியாது. நான் குற்றமற்றவன் என்பதை விரைவில் நிரூபிப்பேன். 
 
எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த மம்தா பேனர்ஜி, ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்