ஜனவரி 18 முதல் 21 வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Mahendran
வியாழன், 16 ஜனவரி 2025 (14:02 IST)
தமிழகத்தில் ஜனவரி 18 முதல் 21ஆம் தேதி வரை லேசான மழை முதல் கன மழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு கேரளா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும், இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி 18ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஜனவரி 19ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

ஜனவரி 20ஆம் தேதி தென் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளிலும், வட தமிழகத்தில் உள்ள சில பகுதிகளிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். ஜனவரி 21ஆம் தேதி தமிழகத்தில் சில இடங்களில், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும். ஜனவரி 22ஆம் தேதி முதல் வறண்ட வானிலை நிலவரம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளையும் சென்னையின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்