திருப்பூர் அருகே தனியார் மதுபான கூடம்.. பொங்கல் தினத்தில் போராட்டம் செய்த பொதுமக்கள்..!

Siva
செவ்வாய், 14 ஜனவரி 2025 (15:42 IST)
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே தனியார் மதுபான கூடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் பின்னணியில், பொங்கல் தினமான இன்று பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளகோவில் உப்பு பாளையம் சாலையில், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பழைய திருமண மண்டபத்தில் பார் வசதிகளுடன் கூடிய தனியார் மதுபான கூடம் அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த இடத்தின் அருகே பள்ளி, தபால் நிலையம், ஐயப்ப சாமி கோயில் ஆகியவை உள்ளன. அதுமட்டுமின்றி, இதன் சுற்றுவட்டாரத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இந்த நிலையில், மதுபான கூடம் அமைத்தால் அந்த பகுதியின் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறி, அந்த பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதுபான கூடத்திற்கான அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பொங்கல் தினத்தில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அமைதிப்படுத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்