நடிகர் விஷால் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருக்கும் மத கஜ ராஜா திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி முதல் முறையாக சேர்ந்த திரைப்படம் மத கஜ ராஜா. 12 ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் முடிந்தாலும், படத்தை தயாரித்த ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டின் கடன்கள் காரணமாக வெளியாகாமல் உள்ளது.
விஷாலும் போராடிப் பார்த்து ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் அந்த படத்தை கைவிட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் இப்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை ரிலீஸ் செய்கிறது. விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கிய நிலையில் பல சிறுபட்ஜெட் படங்கள் ரிலீஸாகின்றன. அந்த வரிசையில் இப்போது விஷாலின் மத கஜ ராஜா திரைப்படமும் இணைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்னர் இதே பொங்கல் நாளில்தான் அந்த படம் ரிலீஸாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
12 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த படம் இப்போது ரசிகர்களைத் திருப்தி செய்யுமா என்ற கேள்வி ரசிகர்களுக்கு உள்ளது. இந்நிலையில் இதுபற்றி ஆனந்த விகடனுக்கு அளித்த நேர்காணலில் பேசியுள்ள திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் “படத்தை எங்களுக்குப் போட்டு காட்டினார்கள். நான் 12 ஆண்டுகளுக்கு முன் எடுத்த படமே என பயந்தேன். ஆனால் படம் இப்போது கனெக்டிங்காக உள்ளது. படத்தில் ஆர்யா கேமியோ ரோல் பண்ணியுள்ளார். மனோ பாலாவின் காமெடி நன்றாக உள்ளது. பாடல்கள் இப்போதும் ஃப்ரஷ்ஷாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.